ஜெனரல்
-
data-chart
ஒதுக்கப்பட்ட நிதியில் 89 சதவீதத்திற்குப் பங்களிக்கும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் முன்னேற்றம் தெரியாமல் உள்ளது: வெரிட்டே ரிசர்ச்

2023 வரவு செலவுத்திட்ட உரையின் 25 மிக உயர்ந்த செலவீனமுடைய முன்மொழிவுகளுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.49.3 பில்லியன் ஆகும். வெரிட்டே ரிசேர்ச் முன்னெடுத்த வருடாந்த மதிப்பீடுகளின் பிரகாரம், ரூ.43.8 பில்லியன் பெறுமதியான (89%) முன்மொழிவுகளின் முன்னேற்றம் குறித்த தகவல்களை அரசாங்கத்தால் வழங்க முடியவில்லை. 

தகவல் நிலை 

2022 ஆம் ஆண்டில், ஒதுக்கப்பட்ட நிதியில் 93% பங்களிக்கும் முன்மொழிவுகளின் முன்னேற்றம் குறித்து தெரியாமல் இருந்தது. மிக உயர்ந்த பெறுமதியைக் கொண்ட வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளின் தகவல்கள் கிடைப்பதில், 2017 ஆம் ஆண்டிலிருந்து இந்த கடந்த இரண்டு ஆண்டுகள் மிக மோசமாக உள்ளன. 

25 முன்மொழிவுகளின் பெறுமதியைக் கவனத்தில் கொள்ளாமல் எண்ணிக்கையைக் கவனித்தால், 18 முன்மொழிவுகளின் (72%) முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான தகவல்கள் கிடைத்துள்ளன. இது 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். 2022 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த அளவான தகவல்களே வெளிப்படுத்தப்பட்டிருந்ததுடன் இது எப்போதும் இல்லாத அளவு குறைவான பெறுமதி ஆகும். அதாவது 29% முன்மொழிவுகளுக்கு மட்டுமே (24 இல் 7) கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முன்னேற்றத்தை மதிப்பிட முடிந்தது. 2023 ஆம் ஆண்டில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்குத் தகவல்கள் கிடைத்த 18 முன்மொழிவுகளின் பெறுமதி ரூ.5.4 பில்லியன் ஆகும். இது மொத்த ஒதுக்கீட்டில் வெறும் 11% ஆகும். 

கடந்த இரண்டு ஆண்டுகளில் வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளாக அதிக ஒதுக்கீடுகளைப் பெற்ற சமூக நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை குறிப்பாகக் குறைவாகக் காணப்படுகிறது. 2022 ஆம் ஆண்டில் ரூ.26.8 பில்லியன் மற்றும் 2023 ஆம் ஆண்டில் ரூ.43 பில்லியன் இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளிலும் இந்த முன்மொழிவுகளின் முன்னேற்றம் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டது. 

தகவல்களை வெளிப்படுத்துவதில் உள்ள இந்தக் குறைபாடு திறந்த வரவு செலவுத்திட்ட அளவீட்டில் (OBS) இலங்கையின் புள்ளிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் வரவு செலவுத்திட்ட வெளிப்படைத்தன்மை புள்ளி (கிடைக்கும் நிலை, தகவல்களின் விரிவான தன்மை மற்றும் காலக்கெடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது) 100க்கு 37 ஆகும். இது உலகளாவிய சராசரியான 45 ஐ விடக் குறைவாகும். மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத் தகவல்களை பொது மக்கள் பெறுவது தொடர்பான ஒப்பீட்டு மதிப்பீட்டை முனனெடுக்கும் உலகின் ஒரே சுயாதீனமான மதிப்பீடு OBS மட்டுமே ஆகும். 

நடைமுறைப்படுத்தல் நிலை 

முன்மொழிவுகளின் எண்ணிக்கையில் 16% (25 இல் 4) மட்டுமே 2023 ஆம் ஆண்டில் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன. சிறுவர் போசாக்கை மேம்படுத்த ரூ.500 மில்லியன் செலவு செய்யும் வரவு செலவுத்திட்ட முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படாத முன்மொழிவிற்கான ஒரு உதாரணம் ஆகும். 

இந்த முன்மொழிவை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பான முகவர் நிலையம் சுகாதார அமைச்சு (MoH) என நிதி அமைச்சு (MoF) வெரிட்டே ரிசர்ச்சிடம் தெரிவித்தது. இந்த முன்மொழிவு தொடர்பான தகவல் அறியும் உரிமைக் கோரிக்கைக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சு, நிதி அமைச்சின் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்திடம் நிதி கோரி முன்மொழிவைச் சமர்ப்பித்ததாகவும் ஆனால் நிதி கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தது. 

டிசம்பர் 31, 2023 வரை முன்னேற்றத்தை மதிப்பிடும் வெரிட்டே ரிசர்ச்சின் சமீபத்திய ஆண்டு இறுதி வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள் மதிப்பீட்டில் இந்தக் கண்டுபிடிப்புகள் உள்ளன. இந்த அறிக்கை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளையும் வழங்குகின்றது. 

பரிந்துரைகள் 

முன்னேற்றத்திற்கான பல்வேறு பரிந்துரைகளை இந்த அறிக்கை வழங்குகின்றது. அறிக்கை குறிப்பிடும் மூன்று முக்கிய விடயங்கள்:  

  • செயற்குழு (MoF) மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (COPA) மற்றும் அரச நிதிக் குழு (COPF) போன்ற சட்டமன்றக் குழுக்கள் ஊடாக வரவு செலவுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மேற்பார்வையை மேம்படுத்துதல். 

  • முன்மொழிவுகள் நன்கு வடிவமைக்கப்பட்டவை என்பதுடன் அவற்றை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு முன்மொழிவுகளுக்கும் அனுமானம் மற்றும் பகுப்பாய்வுகளுடன் கூடிய துணை ஆவணங்களை வெளியிடுதல்.  

  • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் தாமாக முன்வந்து தகவல்களை வெளிப்படுத்துவதற்கான தேவைப்பாடுகளுடன் இணங்குவதுடன் சரியான நேரத்தில் தகவல்களை அமைச்சின் இணையத்தளங்களில் வெளியிடுதல். 

கண்காணிக்கப்பட்ட முன்மொழிவுகள், நிறைவேற்றுவதற்குப் பொறுப்பான முகவர் நிலையங்கள் மற்றும் ஏனைய கண்டுபிடிப்புகள் தொடர்பான மேலதிகத் தகவல்களுக்கு, வெரிட்டே ரிசர்ச்சின் PublicFinance.lk தளத்தில் ‘வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்’ எனும் ஆன்லைன் டாஷ்போர்டைப் பார்வையிடவும்: https://dashboards.publicfinance.lk/budget-promises/  

2024-06-13
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்