ஜெனரல்
-
data-chart
வரவு செலவுத் திட்ட வெளிப்படைத்தன்மை - 125 நாடுகளில் இலங்கை 80 வது இடத்தில் உள்ளது

தேசிய வரவு செலவுத்திட்ட சுழற்சிகளின் வெளிப்படைத்தன்மையை மதிப்பிடும் உலகின் ஒரே ஒரு சுட்டெண்ணான திறந்த வரவு செலவுத்திட்ட மதிப்பாய்வின் (OBS) 2023ம் ஆண்டின் பதிப்பு, இலங்கையின் வரவு செலவுத்திட்ட வெளிப்படைத்தன்மைக்கு 100க்கு 37 மதிப்பெண்களை வழங்கியுள்ளது, இது உலகளவில் 125இல் 80வது இடத்தையும், தெற்காசியாவில் மூன்றாவது இடத்தையும் கொண்டுள்ளது.  

இந்த மதிப்பெண் மிதமான முன்னேற்றத்தைக் காட்டினாலும், முக்கிய வரவுசெலவுத் திட்ட ஆவணங்களின் அணுகல்தன்மை, நேரம் மற்றும் விரிவானதன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடைவெளிகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, இது நிதித் தகவலுக்கு சிறந்த பொது அணுகலுக்கான அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகிறது. 

வரவு செலவுத்திட்ட மேற்பார்வை மற்றும் பொதுமக்கள் பங்களிப்பையும் திறந்த வரவு செலவுத்திட்ட மதிப்பாய்வு (OBS) மதிப்பீடு செய்தது. வரவுசெலவுத் திட்ட மேற்பார்வை, வரவுசெலவுத் திட்ட செயற்பாட்டில் பாராளுமன்றம் மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகம் (NAO) என்பவை வகிக்கும் பங்கு மற்றும் அவை எந்த அளவிற்கு மேற்பார்வையை வழங்குகின்றன என்பதை ஆராய்கிறது. பாராளுமன்றம் மற்றும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளை பிரதிபலிக்கும் வகையில், இந்த விடயத்தில் இலங்கை 100க்கு 63 புள்ளிகளைப் பெற்று, உலகளாவிய சராசரியை விஞ்சியுள்ளது.  

2012 ஆம் ஆண்டில் திறந்த வரவு செலவுத்திட்ட மதிப்பாய்வுக்கு (OBS) மேற்பார்வை சேர்க்கப்பட்டதிலிருந்து இலங்கை போதுமான அளவிலான மேற்பார்வையை அடைந்த முதல் நிகழ்வை இந்த மதிப்பெண் குறிக்கிறது. எவ்வாறாயினும், கணக்காய்வு மேற்பார்வை போதுமானதாகக் கருதப்பட்டாலும், சட்டமன்ற மேற்பார்வை இன்னும் குறைவாகவே உள்ளது, இது வரவு செலவுத்திட்ட சுழற்சியில் வலுவான சட்டமன்ற ஈடுபாட்டின் அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது. 

இலங்கையின் வரவு செலவுத் திட்ட செயன்முறையில் பொதுமக்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் குறைவாக உள்ளதோடு, இதற்காக 100 க்கு 7 மதிப்பெண்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளது. இந்த மோசமான எண்ணிக்கை, உருவாக்கம் முதல் மேற்பார்வை நிலைகள் வரையான வரவுசெலவுத் திட்ட கலந்துரையாடல்களில் பொதுமக்கள்  ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வாய்ப்புக ளே உள்ளன என்பதைக் குறிக்கிறது.  

பின்தங்கிய மற்றும் பாதிக்கப்படக்கூடிய குழுக்கள் உட்பட சமூகத்தின் அனைத்து பிரிவுகளின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை பிரதிபலிக்கும் உள்ளடக்கிய வரவு செலவுத்திட்ட செயன்முறையை உருவாக்க பயனுள்ள பொதுமக்கள் பங்கேற்பு அவசியம். இதனை மேம்படுத்துவதற்கு, வரவு செலவுத்திட்ட சுழற்சியின் அனைத்து கட்டங்களிலும் பொதுமக்களின் ஈடுபாட்டிற்கான முறையான வழிமுறைகளை நிறுவுவது அரசாங்கத்திற்கு முக்கியமானது, இது சமூகத்தின் செயலூக்கமான ஈடுபாட்டை ஊக்குவிக்கிறது.  

தற்போதைய நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் நிலையான வளர்ச்சியை அடைவதற்கும், இலங்கை அதன் பொது நிதி முகாமைத்துவ (PFM) அமைப்பை வலுப்படுத்த வேண்டும். வரவு செலவுத் திட்ட வெளிப்படைத்தன்மை, மேற்பார்வை மற்றும் வரவு செலவுத்திட்ட சுழற்சியில் பொதுமக்கள் பங்கேற்பு ஆகியவை பயனுள்ள பொது நிதி முகாமைத்துவத்தின் (PFM)  முக்கிய கூறுகளாகும். இயற்றப்பட்ட பொது நிதி முகாமைத்துவ சீர்திருத்தங்களின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்த இந்த பகுதிகளில் மேம்பட்ட செயற்திறன் அவசியம். திறந்த வரவு செலவுத் திட்ட மதிப்பாய்வின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன, குறிப்பாக வலுவான மற்றும் வெளிப்படையான நிதி முகாமைத்துவம் அவசியப்படுகின்ற முக்கிய பொருளாதார சவால்களை நாடு எதிர்கொள்கிறது. 

திறந்த வரவு செலவுத்திட்ட மதிப்பாய்வு என்பது உலகின் ஒரே ஒரு சுயாதீனமான, ஒப்பீட்டு மற்றும் உண்மை அடிப்படையிலான ஆராய்ச்சி கருவியாகும், இது மத்திய அரசின் வரவு செலவுத்திட்ட தகவல்களுக்கான பொதுமக்களின் அணுகல், பொதுமக்கள் பங்கேற்புக்கான வாய்ப்புகள் மற்றும் வரவு செலவுத்திட்ட மேற்பார்வை நிறுவனங்களின் பங்கு ஆகியவற்றை மதிப்பிடுகிறது. அரசாங்கங்கள் தங்கள் வரவு செலவுத்திட்ட செயன்முறைகளை எந்தளவு சிறப்பாக நிர்வகிக்கின்றன மற்றும் வெளிப்படுத்துகின்றன என்பதற்கான விரிவான மதிப்பீட்டை வழங்குவதற்கு இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களைப் பயன்படுத்துகிறது.  

முடிவாக, 2023 திறந்த வரவு செலவுத்திட்ட மதிப்பாய்வு (OBS) அறிக்கை இலங்கையின் வரவு செலவுத்திட்ட வெளிப்படைத்தன்மை மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் சில முன்னேற்றங்களை எடுத்துக்காட்டினாலும், இது குறிப்பிடத்தக்க சவால்களையும் சுட்டிக்காட்டுகிறது, குறிப்பாக பொதுமக்கள் பங்கேற்பில். வெளிப்படையான, பொறுப்புக்கூறக்கூடிய மற்றும் உள்ளடக்கிய நிர்வாக கட்டமைப்பை வளர்ப்பதற்கு இந்த அம்சங்களை மேம்படுத்துவது முக்கியம். 

இலங்கைக்கான முழுமையான சுருக்க அறிக்கையை நீங்கள் இங்கே அணுகலாம்: https://internationalbudget.org/open-budget-survey/country-results/2023/sri-lanka 

2024-07-31
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்