ஜெனரல்
-
data-chart
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்: ஆய்வு முறை

உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான் என்றால் என்ன?

உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான் என்பது publicfinance.lk தளத்தின் கீழான ஒரு டாஷ்போர்டு ஆகும். 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, பாரிய உட்கட்டமைப்பு கருத்திட்டங்கள் தொடர்பில் செயலூக்கமான இணைய வழி தகவல் வெளிப்படுத்தலை இந்த டாஷ்போர்டு மதிப்பிடுகிறது.

இதை முன்னெடுக்க எங்களை ஊக்கப்படுத்தியது எது?

உட்கட்டமைப்பு கருத்திட்டங்கள் தொடர்பான எங்களின் ஆய்வின்போது நாங்கள் பின்வருவனவற்றைக் கண்டறிந்தோம்,

 • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 9(1)(b) பிரிவின் கீழ் முகவரகங்கள் வெளியிட வேண்டிய தகவல்கள் குறித்து அரச முகவரகங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு மிகக் குறைவாக உள்ளது.

 

 • அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் உட்கட்டமைப்பு கருத்திட்டங்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் நிலை மற்றும் அணுகல்தன்மை மிகக் குறைவாக உள்ளது.

 

 • தகவல் வெளிப்படுத்துகை குறைவாகக் காணப்படுவது ஊழல் /மோசடிகள், அதிக செலவினங்கள், குறைந்த தரம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கிறது. கருத்திட்டங்கள் மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மக்களிடையே நம்பிக்கை குறைவதற்கு இது முக்கிய காரணியாக விளங்குகிறது.

 

எனவே, பின்வரும் நோக்கங்களைக் கருத்தில் கொண்டு இந்த டாஷ்போர்டை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

 1. தகவல் அறியும்உரிமைச் சட்டத்தின்படி முன்கூட்டியே தகவல்களை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து அரச முகவரகங்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
 2. தகவல்களை வெளியிடுவது மற்றும் சட்டத்துடன் இணங்குவதை ஆராய்வதன் மூலம் தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டிய தேவைப்பாட்டுடன் இணங்குவது குறித்து பொதுமக்களை கேள்வி கேட்கச் செய்தல்.
 3. கருத்திட்டங்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் உட்கட்டமைப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கும் செயலாக்கத்தில் பொதுமக்கள் பங்களிப்பதற்கான வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் ஊழல்/மோசடிகளுக்கான வாய்ப்பைக் குறைத்தல்.

ஆய்வு முறை

விளக்கம் மற்றும் ஆய்வு முறை

கருத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு  என்னென்ன அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன?

2022 ஆம் ஆண்டின் மதிப்பீடு

 • 1.08 டிரில்லியன் ரூபா பெறுமதியுள்ள 60 பாரியளவிலான உட்கட்டமைப்புக் கருத்திட்டங்கள் மதிப்பிடப்பட்டன. பின்வரும் அளவுகோல்களின் அடிப்படையில் கருத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன:
  • கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் (DPMM) 2021 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு அறிக்கைக்கு அமைய, குறைந்தபட்சம் 1% பௌதீக முன்னேற்றத்துடன் 2019 ஆம் ஆண்டு முதல் ஆரம்பிக்கப்பட்ட மற்றும் ஜுன் 2021 நிலவரப்படி நிறைவுசெய்யப்படாத கருத்திட்டங்கள்.

  • பாரியளவிலான கருத்திட்டங்கள் (வரம்பு – ரூ.32.5 மில்லியனுக்கு மேற்பட்ட வெளிநாட்டுத் திட்டங்கள் மற்றும் ரூ.500,000 மேற்பட்ட உள்நாட்டுத் திட்டங்கள்)

  • மொத்த உத்தேச செலவினத்தின் அடிப்படையில் உயர் செலவினத்தைக் கொண்ட கருத்திட்டங்கள் இந்த மதிப்பீட்டிற்குத் தெரிவு தெரிவு செய்யப்பட்டன.

  • மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்ட கால இடைவெளி 2021 ஜனவரி  முதல் 2022 மார்ச் வரையாகும்.

2023 ஆம் ஆண்டின் மதிப்பீடு

2.54 டிரில்லியன் ரூபா பெறுமதியுள்ள 60 பாரியளவிலான உட்கட்டமைப்புக் கருத்திட்டங்கள் மதிப்பிடப்பட்டன.

 • அவற்றுள், பின்வரும் அளவுகோல்களின் அடிப்படையில் 2022ஆம் ஆண்டின் மதிப்பீட்டில் இருந்து 37 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன:

  • கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் (DPMM) 2022 இற்கான மூன்றாம் காலாண்டு அறிக்கையின்படி 2022 செப்டம்பர் 30 நிலவரப்படி  செயல்முறையில் இருந்த  2022 மதிப்பீட்டின் கருத்திட்டங்கள் பட்டியலிடப்பட்டன.

  • அந்த பட்டியலிலிருந்து, தெரிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச பௌதீக முன்னேற்றத்துடன் 37 கருத்திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. (ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றம்  குறைந்தபட்சம் 0.1% ஆக இருந்த கருத்திட்டங்களே தேர்ந்தெடுக்கப்பட்டன)

 

 • 2023 மதிப்பீட்டிற்கான மீதமுள்ள 23 திட்டங்கள் பின்வரும் அளவுகோல்களின் அடிப்படையில் கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்தின் (DPMM) 2022 இற்கான மூன்றாம் காலாண்டு அறிக்கையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன:

  • 2019 இல் தொடங்கப்பட்டு, செப்டம்பர் 30, 2022 நிலவரப்படி முடிக்கப்படாத, குறைந்தபட்சம் 0.1% ஒட்டுமொத்த பௌதீக முன்னேற்றத்துடன் கூடிய கருத்திட்டங்கள் பட்டியலிடப்பட்டது.

  • அதிகூடிய மொத்த மதிப்பிடப்பட்ட செலவின் அடிப்படையில் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

  • வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு  நிதி மூலங்கள்  மூலம் நிதியளிக்கப்படும் பாரியளவிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் (தொடக்க வரம்பு  -  வெளிநாட்டு கருத்திட்டங்களுக்கு ரூபா 32.5 மில்லியனுக்கு மேல் மற்றும் உள்நாட்டு திட்டங்களுக்கு ரூபா 500,000 மேல்).

 • 2023 ஜனவரி  முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதிக்குள் கருத்திட்டங்கள் பற்றிய தகவல்களின்  ஒன்லைன் கிடைப்பனவுத்தன்மை  மதிப்பிடப்பட்டது.

எந்த வகையான தகவல்களை முகவரகங்கள் முன்கூட்டியே வெளியிட வேண்டும்?

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இல. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 9(1)(b) பிரகாரம் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அடிப்படையில், கீழுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் வகைகளை முகவரகங்கள் வெளிப்படுத்த வேண்டும். இந்த மதிப்பீட்டிற்கு 5 வகைகளின் கீழ் 40 தகவல்கள் மொத்தமாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 9 ஆவது பிரிவின் கீழ் விதித்துரைக்கப்பட்டவாறாக உத்தேசக் கருத்திட்டம் ஒன்றின் முன்னறிவித்தல், அத்தகைய கருத்திட்டம் ஆரம்பிப்பதற்கு ஆகக்குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னர் அமைச்சுக்களால் வழங்கப்பட வேண்டும் என்பது விதியாகும்.

 

வகை

இல.

தகவல்

முன்கூட்டிய வெளிப்படுத்துகை தொடர்பான விதி

கருத்திட்ட விபரங்கள்

1

கருத்திட்டத்தின் விளக்கம்

 

2016ம் ஆண்டின் 12ம் இல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 9(1)(b) அடிப்படையில் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள்

2

நடைமுறைப்படுத்தும் அமைச்சு

3

நிறைவேற்றும் முகவரகம்

4

கருத்திட்ட அமைவிடம் (மாகாணம், மாவட்டம், பிரிவு, அமைப்பிடம்)

5

ஆரம்பிக்கும் திகதி

6

நிறைவு செய்ய எதிர்பார்க்கும் திகதி

நோக்கங்கள் மற்றும் பயனாளிகள்

7

கருத்திட்ட நோக்கங்கள்/ இலக்குகள்

8

கருத்திட்டம் மூலம் எதிர்பார்க்கப்படும் விளைவுகள் /நன்மைகள்

9

எதிர்பார்க்கப்படும் பயனாளிகள்/ பங்குதாரர்கள்

10

முன்மொழியப்பட்ட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் யாரேனும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா? - ஆம்/இல்லை

11

ஆம் எனில், அவர்களுக்குப் போதுமான அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளதா மற்றும்/அல்லது கருத்திட்டம் தொடர்பில் அவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டதா? - ஆம்/இல்லை

12

இல்லையெனில், தவிர்த்தமைக்கான காரணங்களை விளக்குக

13

பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடு / நட்டஈடு வழங்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள்/விளக்கத்தை வழங்கவும்

14

கருத்திட்ட நியாயப்படுத்துகை (உதாரணம்: நிதி மற்றும் சமூகப் பயன்)

வரவு செலவுத்திட்டம் மற்றும் நிதி விபரங்கள்

15

எதிர்பார்க்கப்படும் செலவினம்

16

இணங்கப்பட்ட தொகை (செலுத்த வேண்டிய தொகை மற்றும் இலங்கை ரூபாய்க்குச் சமமான தொகை)

17

நிதியிடல் மூலங்கள் (வெளிநாடு /உள்நாடு/ஏனையவைஉதாரணம், பொது தனியார் கூட்டாண்மை) கருத்திட்டத்திற்கு நிதியளிக்கும் வெளிநாட்டு அல்லது உள்ளூர் அமைப்புக்கள் /நிறுவனங்களை அடையாளம் காணுதல்

18

கருத்திட்டம் பொது தனியார் கூட்டாண்மையாகச் செயற்படுத்தப்பட்டால், அரசாங்கத்திற்கும் தனியார் துறை தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் இலாபப் பகிர்வு விபரங்கள், நிதித் தகவல் உள்ளடங்கலான முக்கிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை வழங்குக.

19

முன்மொழியப்பட்ட கருத்திட்டத்தை நிறைவேற்ற இலங்கை அரசின்/அரசாங்கத்தின் செலவில் ஒப்பந்ததாரர் அல்லது தனியார் தரப்பினருக்கு வழங்கப்படும் மேலதிக நன்மைகள்/சலுகைகளைப்
பட்டியலிடுக.

கருத்திட்ட ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகள்

20

தேசிய திட்டமிடல் திணைக்களம்/பொருளாதார அபிவிருத்திக் குழு/ அமைச்சரவை/முதலீட்டுச் சபை/மாகாண சபை/உள்ளுராட்சி சபை/ சம்பந்தப்பட்ட அதிகாரசபை ஆகியவற்றிலிருந்து முன்மொழியப்பட்ட கருத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட திகதி.

21

விலைமனுக்கோரல் மதிப்பீடுகள்? ஆம் / இல்லை (திகதியைக் குறிப்பிடவும்)

22

சாத்தியக்கூறு ஆய்வுகள்? ஆம் / இல்லை (திகதியைக் குறிப்பிடவும்)

23

தொழில்நுட்ப மதிப்பீடுகள்? ஆம் / இல்லை (திகதியைக் குறிப்பிடவும்)

24

நிதி மதிப்பீடுகள்? ஆம் / இல்லை (திகதியைக் குறிப்பிடவும்)

25

பௌதீக, உயிரியல், சமூக-கலாசார அல்லது அழகியல் நிலைகளின் மீது சுற்றுச்சூழல் பாதிப்புகள் காணப்படுமாயின் அவற்றை விபரிக்குக.

26

பொருந்துமாயின், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறதா? ஆம் /இல்லை

27

ஆம் எனில், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டை மேற்கொண்ட அமைப்பு /நிறுவனம் மற்றும் அறிக்கை(கள்)யின் திகதி(கள்) பற்றிய
விபரங்களை வழங்குக.

28

இல்லையெனில், தவிர்த்தமைக்கான காரணங்களை விளக்குக.

29

பொருந்துமாயின், தொடர்புடைய ஒழுங்குபடுத்தும் முகவரகங்களிடமிருந்து அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா? - ஆம்/ இல்லை

30

ஆம் எனில், எந்த முகவரகங்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன மற்றும் அத்தகைய அனுமதிகள் பெறப்பட்ட திகதிகள்.

31

எவற்றின் அனுமதிகள் நிலுவையில் உள்ளன?

கருத்திட்ட கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்கள்

32

கருத்திட்டம் கேள்விகோரப்பட்டு முன்வைக்கப்பட்டதா / கேள்வி கோரப்படாமல் முன்வைக்கப்பட்டதா?

33

கேள்வி கோரப்படாவிடின், கருத்திட்டத்தை முன்மொழிந்தவர், கருத்திட்ட முன்மொழிவு, முன்மொழிந்த திகதி பற்றிய விபரங்களை வழங்குக.

34

கேள்வி கோரப்படாத கருத்திட்டங்களுக்கான நிதி வெளிவாரியாகப் பெறப்பட்டிருப்பின் நிதியளிப்பவரின் பெயர் மற்றும் நிதியுதவிக்கான நிபந்தனைகளைக் குறிப்பிடுக.

35

கருத்திட்டத்தை செயற்படுத்தும் வழங்குநர்/விற்பனையாளர்/ஒப்பந்ததாரரின்
விபரங்களை வழங்குக.

36

ஒப்பந்தம் வழங்கப்பட்டதா?

37

ஆம் எனில், ஒப்பந்தத்தை நிறைவேற்றும் திகதி

38

இல்லையெனில், ஒப்பந்தத்தை நிறைவேற்ற முன்மொழியப்பட்ட திகதி.

39

விலைமனுதாரர்களின் எண்ணிக்கை மற்றும் கருத்திட்டத்திற்கு விலைமனுக்களை சமர்ப்பித்தவர்களின் பெயர்கள்/தொடர்பு விபரங்களைக் குறிப்பிடுக.

40

ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் அவற்றையும் அவற்றைக் கையாளுவதற்கான (பொதுமக்களால் அணுகக்கூடிய, நேர்மை மற்றும் வெளிப்படைத்தன்மையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட தரநிலைகளுக்கு இணங்கும்) பொறிமுறையையும் குறிப்பிடவும்.

 

 மதிப்பீட்டுக்கு எந்த இணைய மூலங்கள் பயன்படுத்தப்பட்டன?

தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்துவதற்கு அமைச்சுக்களே பொறுப்பு எனச் சட்டம் குறிப்பிடுவதால், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் நிரல் அமைச்சுக்களின் (அதாவது, நிறைவேற்றும் முகவரக இணையத்தளம் மற்றும் நடைமுறைப்படுத்தும் அமைச்சின் இணையத்தளம்) இணையத்தளங்களில் கிடைக்கும் தகவல்களை கண்டறிவதன் மூலம் இணையத்தில் தகவல்களை வெளிப்படுத்துவது தொடர்பான மதிப்பீடு முன்னெடுக்கப்பட்டது.

கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் கண்காணிப்பு திணைக்களத்தின் அறிக்கையில் வெளியிடப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட முகவரகங்கள் கண்டறியப்பட்டன.

சட்டத்தின் பிரகாரம் இணையத்திலும் நேரடியாகவும் விளம்பரப் பலகைகள் போன்ற பிற வழிகளின் மூலமாகவும் வெவ்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி முகவரகங்கள் தகவல்களை முன்கூட்டியே வெளிப்படுத்தலாம் என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம். பொறுப்பான அமைச்சு/அரசாங்க முகவரகம் ஆகியவற்றின் இணையத்தளங்களில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையை இந்த மதிப்பீடு ஆய்வு செய்கிறது.

இணையத்தளத்தில் தகவல்கள் கிடைக்கும் நிலை மற்றும் வெளியிடப்பட்ட தகவல்களை ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மும்மொழிகளிலும் அணுக முடிகிறதா என்பதையும் இந்த மதிப்பீடு ஆய்வு செய்கிறது.

 

வெளிப்படுத்துகையின் சராசரி நிலையைக் கணக்கிட என்ன முறை பயன்படுத்தப்பட்டது?

 • ஒவ்வொரு கருத்திட்டத்திற்கும் முன்கூட்டியே வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் சராசரி நிலை, உத்தியோகபூர்வ சரிபார்க்கப்பட்ட மூலங்களில் வெளிப்படுத்தப்பட்ட அந்தக் கருத்திட்டத்திற்குப் பொருந்தக்கூடிய[1] தகவல்களின் விகிதத்தை மதிப்பிடுவதன் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது.

 

 • இணையதளத்தில் குறித்த தகவல் கிடைக்கப்பெற்றிருந்தால், அது "கிடைக்கக்கூடிய தகவல்" என்றும், இணையதளத்தில் குறித்த தகவல் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லையெனில்;, அது "கிடைக்கப்பெறாத தகவல்" என்றும் கருத்திற் கொள்ளப்பட்டது.

 

தகவல் அணுகலை (அல்லது மும்மொழிகளிலும் தகவல்கள் கிடைப்பதை) கணக்கிட என்ன முறை பயன்படுத்தப்பட்டது?

 • மும்மொழிகளிலும் தகவல்கள் எந்த அளவிற்கு முன்கூட்டியே வெளியிடப்பட்டன என மதிப்பிடப்பட்டது.

 

 • ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கும் தகவல்கள் அல்லது குறைந்தபட்சம் சிங்களத்திலோ தமிழிலோ கிடைக்கும் தகவல்களின் சதவீதம் அடையாளம் காணப்பட்டது.

 

ஒவ்வொரு மொழியிலும் முனைப்புடனான தகவல்களை வெளிப்படுத்துவதன் சராசரி நிலை=   

கட்டுப்பாடுகள்

 • தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் நிலையை மாத்திரமே மிகக்குறைந்த அளவுகோலுடன் உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான் மதிப்பிட்டது. வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் துல்லியம், நம்பகத்தன்மை அல்லது காலந்தவறாமை ஆகியவற்றை மதிப்பிடவில்லை.
 • உள்நாட்டு உள்கட்டமைப்பு கருத்திட்டங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது வெளிநாட்டு நிதியுதவி கருத்திட்டங்கள் குறைவாக இருப்பதற்கான காரணம், மதிப்பீட்டுக்குட்படுத்தப்பட்ட காலகட்டத்தில் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட வெளிநாட்டு திட்டங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தமை ஆகும்.
 • தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் அமைச்சுக்கள்/ முகவரகங்கள்  தகவல்களை இணையத்திலும் நேரடியாகவும் வெவ்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டும். இந்த மதிப்பீடு பொறுப்பான அமைச்சு/அரச முகவரகம் அதன் இணையதளம்/கள் வழியாக ஆன்லைனில் வெளிப்படுத்திய தகவலின்  அளவை மட்டுமே ஆய்வு செய்தது.
 

[1] தகவலின் அனைத்து நிலைகளும் அனைத்துக் கருத்திட்டங்களுக்கும் சமமாகப் பொருந்துவதில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, இலங்கை அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் கருத்திட்டங்களுக்கு கடன் தொகைகள் பொருந்தாது. எனவே வெளிப்படுத்துகையின் நிலையைக் கணக்கிடும்போது ஒவ்வொரு கருத்திட்டத்திற்கும் பொருத்தமான தகவல்களை மட்டும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.

 

2022-05-17
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்