ஜெனரல்
-
data-chart
பாரியளவிலான கருத்திட்டங்களின் கொள்முதல் விவரங்களைத் தேடிப் பெற முடியவில்லை வெளிநாட்டுக் கடன் மற்றும் மானியங்களினூடாக மேற்கொள்ளப்படும் கருத்திட்ட விவரங்களும் அவற்றுள் அடக்கம்.

வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான் இணையத்தளத்தின் 2024க்கான புதுப்பித்தலின் படி, நாட்டின் பாரியளவான உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கருத்திட்டங்களின் கொள்முதல் விபரங்கள், பொதுமக்களால் தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.  

2024ஆம் ஆண்டளவில், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் 50 பாரியளவான உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்கள் இத்தளத்தின் கீழ் ஆராயப்பட்டுள்ளன. இவற்றில், 21 திட்டங்களுக்கு உள்நாட்டுக் கடன் மற்றும் மானியங்கள் மூலம் நிதியளிக்கப்படுவதோடு, 29 திட்டங்களுக்கு வெளிநாட்டுக் கடன் மற்றும் மானியங்கள் வாயிலாக நிதியளிக்கப்படுகின்றன. இத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூபா 1.01 டிரில்லியன் ஆகும்.  

2016 ஆம் ஆண்டின் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 9ம் பிரிவின்படி, ஒரு கருத்திட்டம் தொடர்பான தகவல்கள் ஐந்து வகைகளின் கீழ் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். கருத்திட்ட விபரங்கள், நோக்கங்கள் மற்றும் பயனாளிகள், வரவு செலவுத்திட்டம் மற்றும் நிதி விபரங்கள், கருத்திட்ட ஒப்புதல்கள் மற்றும் அனுமதிகள், கருத்திட்ட கொள்முதல் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவையே அவ்வைந்து வகைகளுமாகும்.  

இவ்வகைகளின் கீழ் பொதுமக்களுக்கான தகவல் வெளிப்பாடு வெறும் 36% சதவீதம் எனும் குறைவான அளவிலேயே காணப்படுவதாக வெரிட்டே ரிசர்ச் இன் ஆய்வு முடிவுகள் குறிப்பிடுகின்றன. கொள்முதல் தொடர்பான தகவல்களை மட்டும் கருத்திற்கொண்டால், - ஒரு கருத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒப்பந்தக்காரர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர், நிதியுதவியை பெறுவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் எவை போன்ற தகவல்களில் வெறும் 21% மட்டுமே கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆய்வில் மேலும் கண்டறியப்பட்டுள்ளது.  

தகவல்களை வெளிப்படுத்தாமல் இருப்பது மோசடி மற்றும் ஊழலுக்கு வழிவகுப்பதோடு, குறிப்பாக அதிகப் பணம் புழங்கும் கொள்முதல் செயற்பாடுகளில் இடம்பெறும் இவ்வாறான முறைகேடுகள் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடியான, குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். 

இலங்கையின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டுமாயின் கொள்முதல் செயற்பாடுகளில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் ஊழல்களைக் குறைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம் என சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் என்பவை சுட்டிக்காட்டியுள்ளன. இதற்கான முக்கிய நடவடிக்கையாக அமைவது, கொள்முதல் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதாகும். 

பல ஆண்டுகளாக, அரசியல் தலைவர்கள் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதாக பல்வேறுபட்ட வாக்குறுதிகளை வழங்கியிருந்த போதிலும், கருத்திட்டங்கள் தொடர்பான கொள்முதல் தகவல்களையாவது இலங்கையால் இன்னும் ஒழுங்கான முறையில் வெளியிட முடியாமல் இருப்பது, அவ்வாறு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் சரியாக நிறைவேற்றப்படவில்லை என்பதைக் குறித்துக் காட்டுகிறது. 

2024 ஜனாதிபதித் தேர்தல் மேடைகலிலிருந்து இதுவரை அறிவிக்கப்பட்ட சில கொள்கை அறிக்கைகளும் மோசடி மற்றும் ஊழலைக் கட்டுப்படுத்துவதாக பல வாக்குறுதிகளை அளித்துள்ளன. அதிகாரத்திற்கு வந்த பிறகு, குறைந்தபட்சம் தகவலறியும் உரிமைச் சட்டத்திற்கு ஏற்றவாறு, கருத்திட்டங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் முன்கூட்டியே பகிரங்கப்படுத்தப்படுமானால், அதுவே ஜனாதிபதித் தேர்தல் மேடையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் உண்மையான நிறைவேற்றமாக கருதப்படும். 

இந்த நோக்கத்திற்காக, வெளிநாட்டு கடன்கள் மற்றும் மானியங்களை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு அரசாங்கங்களும் ஆதரவளிப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் மானியங்கள் மூலம் நிதியளிக்கப்படும் கருத்திட்டங்களுக்கான கொள்முதல் தகவல்களை வெளியிடுவது தற்போது மிகவும் குறைவாக இருப்பதால், நாட்டின் தகவலறியும் உரிமைச் சட்டத்திற்கு அமைவாக திட்டத் தகவல்களைப் பகிரங்கமாக வெளியிடுவதற்கு இந்த நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்திடம் உறுதிப்பாட்டை கோரலாம். அவ்வாறு செய்வதன் மூலம், இலங்கையில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களும் அரசாங்கங்களும் அளப்பெரிய பங்களிப்பை வழங்க முடியும். 

மேலதிக தகவல்களைப் பெற - https://dashboards.publicfinance.lk/infrastructure-watch/  

2024-09-03
0 கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்