2022 ஆம் ஆண்டில், இலங்கை அரசாங்கம் - மத்திய மற்றும் மாகாண ரீதியில் முதன்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை ஆகிய அனைத்து மட்டங்களுக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.5 சதவீதத்தை மாத்திரமே கல்விக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் விளைவாக, கல்விக்காக மிகக் குறைந்த செலவினங்களைக் கொண்ட உலகின் மூன்றாவது நாடாக இலங்கை மாறியுள்ளதோடு ஹைட்டி மற்றும் லாவோஸ் மட்டுமே தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இலங்கையை விட குறைந்த சதவீதத்தை செலவிடுகின்றன.
தெற்காசியாவிலே மிகக் குறைந்த கல்விச் செலவினத்தை கொண்ட நாடாகவும் இலங்கையே உள்ளது.
குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பெரும்பகுதியை கல்விக்காக ஒதுக்கீடு செய்கின்றன. எனவே அந்நாடுகளுடன் இலங்கையை ஒப்பிடும் போது இலங்கையின் கல்விக்கான இக்குறைந்த முதலீடு மேலும் சுட்டிக் காட்டப்படுகிறது. உதாரணமாக, சியரா லியோன் 8.8 சதவீதத்தையும், மாலி 4 சதவீதத்தையும், உகாண்டா 2.6 சதவீதத்தையும் ஒதுக்குகிறது. இந்த ஒப்பீடுகள் இலங்கைக் கல்வித் துறையின் ஒப்பீட்டளவில் குறைவான நிதியொதுக்களை கோடிட்டுக் காட்டுகின்றன.
இலங்கைக்கும் இந்த நாடுகளுக்கும் இடையே உள்ள வெளிப்படையான வேறுபாடு, நாட்டின் பாதீட்டு முன்னுரிமைகள் மற்றும் அதன் வளர்ச்சிக்கான நீண்டகால விளைவுகள் பற்றிய முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. கல்வியில் முதலீடு செய்வது பொருளாதார அபிவிருத்திக்கும், மனித வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. நிதியொதுக்கீட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படாவிட்டால், மனித மூலதனம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகிய இரண்டிலும் இலங்கை தனது எதிர்கால நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில் சவால்களை எதிர்கொள்ளக்கூடும்.
குறிப்பு:
உலக வங்கியின் தரவுத்தளம் 2020 முதல் 163 நாடுகளுக்கான தரவுகளை வழங்கியுள்ளது.
1 மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நாடுகள் மிகக்குறைந்த கல்விச் செலவின பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளன. அவ்வாறு விலக்கப்பட்ட ஒரே நாடான மொனாக்கோ, கல்விச் செலவினத்துக்காக 1.4%ஐ ஒதுக்கி இருந்தது.
இலங்கைக்கான புள்ளிவிபரங்கள் மத்திய வங்கியின் செயல்பாட்டு வகைப்பாட்டில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டதோடு இது கல்விக்கான மத்திய அரச மற்றும் மாகாண சபை செலவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடக்கியது.
மூலங்கள்
உலக வங்கி. "கல்விக்கான அரசாங்கத்தின் செலவினம், மொத்தம் (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக)" https://data.worldbank.org/indicator/SE.XPD.TOTL.GD.ZS?end=2014&locations=BT-AF-LK-IN-MV-NP-PK-BD&start=1971 என்னும் இணைப்பிலிருந்து பெறப்பட்டது. [இறுதியாக அணுகியது 10 அக்டோபர் 2024].
இலங்கை மத்திய வங்கி. "ஆண்டறிக்கைகள்." https://www.cbsl.gov.lk/en/publications/economic-and-financial-reports/annual-reports என்னும் இணைப்பிலிருந்து பெறப்பட்டது. [இறுதியாக அணுகியது 10 அக்டோபர் 2024]