தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான பாரம்பரியத் தின்பண்டங்களுக்கான செலவு 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. ஆனால் 2019 ஆம் ஆண்டிலிருந்ததை விட தொடர்ந்தும் இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது.
வெரிட்டே ரிசேர்ச் நிர்வகிக்கும் இலங்கையின் பொருளாதார விபரங்களை வழங்கும் முன்னணி தளமான PublicFinance.lk முன்னெடுத்த “புத்தாண்டு” தின்பண்டங்களுக்கான வருடாந்தச் செலவு தொடர்பிலான ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இது பொருட்களுக்கான செலவு 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் 2 சதவீதத்தால் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் செலவு 2.3 மடங்கு அதிகரித்திருந்தது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் இது சற்றுக் குறைந்து 2.2 மடங்காக உள்ளது.
செழுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் இலங்கையின் பாரம்பரிய இனிப்புகள் பல புத்தாண்டுக்கான தின்பண்டங்களில் இடம்பெறும். குடும்பங்களுக்கு இடையே இவற்றில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும், பாரம்பரிய புத்தாண்டு இனிப்புப் பண்டங்களில் பொதுவாக பாற்சோறு, கொக்கிஸ், வாழைப்பழம், அலுவா, பணியாரம், தொதல், பயத்தம் பணியாரம் மற்றும் பட்டர் கேக் ஆகியவை இடம்பிடிக்கும். இந்தப் பகுப்பாய்வில் பிரபல யூடியூப் சேனலான “அப்பே அம்மா” சேனலில் உள்ள சமையல் குறிப்புகளின் அடிப்படையில், 4-5 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான அளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான பொருட்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன, மின்சாரம், எரிவாயு மற்றும் மசாலாப் பொருட்களுக்கான செலவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. 2019 (ஏப்ரல் வாரம் 1), 2023 (ஏப்ரல் வாரம் 1) மற்றும் 2024 (மார்ச் வாரம் 3) ஆகியவற்றுக்கான கொழும்பு மாவட்ட திறந்த சந்தையின் வாராந்த சராசரி சில்லறை விலைகள் உட்பட விலைகளுக்கான தரவு நேரடியாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.