1999 ஆம் ஆண்டுக்கு முன்பு அனைத்து துறைமுகங்களும், துறைமுகங்களிலுள்ள முனையங்களும் இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமான இங்கை துறைமுகங்கள் அதிகாரசபைக்கு 100% சொந்தமாக இருந்ததுடன் பராமரிக்கப்பட்டு வந்தது.
1999 ஆம் ஆண்டில் முதன் முறையாக கொழும்பு துறைமுகத்திலுள்ள தெற்காசிய நுழைவாயில் முனையத்தை (SAGT -South Asia Gateway Terminal) 30 ஆண்டு காலத்திற்குப் பராமரிப்பதற்கு இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை பொது தனியார் கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
அடுத்து கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் சைனா மெர்ச்சென்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பனி லிமிடெட், எயிட்கென் ஸ்பென்ஸ் மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை இடையே 35 ஆண்டு கால கட்டு – பராமரி - மாற்று ஒப்பந்தந்தின் கீழ் 2011ல் கைச்சாத்திடப்பட்டது. ஆரம்பக்கட்டத்தில் சைனா மெர்ச்சென்ட்ஸ் 55 சதவீதமும் எயிட்கென் ஸ்பென்ஸ் 30 சதவீதமும் இலங்கை துறைமுக அதிகாரசபை 15 சதவீதமும் பங்குகளைக் கொண்டிருந்தன.
2018ன் ஆரம்பத்தில் இலங்கை துறைமுக அதிகாரசபையிடம் காணப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுகம் கூட்டு முயற்சியாக 99 வருடங்களுக்கு சைனா மெர்ச்சென்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் கம்பனி லிமிடெட்டுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. சைனா மெர்ச்சென்ட்ஸ் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஐ.அ.டொ 1,120 மில்லியனை முதலீடு செய்திருந்தது. பங்கு மூலதனத்தில் 85 சதவீதத்தைக் கொள்வனவு செய்வதற்கு சைனா மெர்ச்சென்ட்ஸ் ஐ.அ.டொ 974 மில்லியனை இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு வழங்கியிருந்தது. மீதி 15% பங்குகளை துறைமுக அதிகாரசபை வைத்திருக்கிறது. இந்த நிறுவனம் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமம் எனப் பெயரிடப்பட்டது. அதன் பின்னர் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக சேவைகளின் பங்கு மூலதனத்தில் 58 சதவீதத்தை அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமம் கொள்வனவு செய்தது. மீதி 42% பங்குகள் இலங்கை துறைமுக அதிகாரசபையிடம் உள்ளன. சைனா மெர்ச்சென்ட்ஸிடம் இருந்து பெறப்பட்ட மீதி ஐ.அ.டொ 146 மில்லியன் இலங்கையில் நிறுவனத்தின் பெயரிலுள்ள வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. பின்னர் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகக் குழுமத்தின் பங்குகளில் 20 சதவீதத்தை ஃபுஜியன் ட்ரான்ஸ்போர்டேஷனுக்கு சைனா மெர்ச்சென்ட்ஸ் விற்பனை செய்திருந்தது.
1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட முனையங்களில் 100% உரிமையையும் கட்டுப்பாட்டையும் துறைமுக அதிகாரசபை கொண்டிருக்கும் என நம்பப்படும் ஒரே முனையம் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் ஆகும்.