தலைப்பு: 2024 ஆம் ஆண்டிலும் இலங்கை 33வது ஆண்டாக வரவு செலவுத் திட்ட வருமான இலக்கை எட்டத் தவறும்
உப தலைப்பு: வரவு செலவுத் திட்டக் கணிப்புடன் ஒப்பிடும்போது வருமானத்தில் 14% பற்றாக்குறையை ‘வரவு செலவுத்திட்ட நிலை தொடர்பான அறிக்கை’ மதிப்பிட்டுள்ளது
2024 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 33வது ஆண்டாக இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானம் தொடர்பான வரவு செலவுத்திட்ட இலக்கை எட்டத் தவறிவிடும் என அண்மையில் வெளியிடப்பட்ட '2024 வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கையில்' எதிர்பார்க்கப்படுகிறது.
‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை’ ஆண்டுதோறும் வெரிட்டே ரிசேர்ச் நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு, பொருளாதாரத் தகவல்களுக்கான இலங்கையின் முதன்மை தளமாக உள்ள PublicFinance.lk இல் வெளியிடப்படுகிறது.
இலங்கையின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தின் நிதி, பணம் மற்றும் பொருளாதார மதிப்பீடுகளின் வலுவான பகுப்பாய்வு மற்றும் புறநிலை மதிப்பீட்டை இந்த அறிக்கை வழங்குகிறது. அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவால் (COPF) வெளியிடப்படும் வரவு செலவுத் திட்ட அறிக்கையின் நோக்கத்தையே இந்த அறிக்கையும் பிரதிபலிக்கிறது. இந்த இரண்டு அறிக்கைகளும் வரவு செலவுத்திட்டம் பற்றிய புரிதலையும் விவாதத்தையும் பொதுமக்கள் மத்தியிலும் பாராளுமன்றத்திலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. வெரிட்டே ரிசேர்ச்சின் ‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை’ பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் அரசாங்கத்தின் கணிப்புகளை விடவும் வரவு செலவுத் திட்ட விளைவுகள் தொடர்பாக மிகவும் துல்லியமான கணிப்புக்களை தொடர்ச்சியாக வழங்கியுள்ளது. இது இலங்கையில் தொழில்சார் பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான ஒரு முக்கியமான மேலதிக உள்ளீட்டை உருவாக்குகிறது.
மிகைப்படுத்தப்பட்ட வரி வருமானம்
1991 ஆம் ஆண்டிலிருந்து வரவு செலவுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருமான இலக்கை இலங்கை இதுவரை எட்டவில்லை. மிகச் சமீபத்தில், வழிவகைகள் பற்றிய பாராளுன்றக் குழு, 2023 ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட இலக்கை விட வரி வருமானம் 13% குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டில் அரசாங்கம் ரூ.4,164 பில்லியன் வருமானத்தை எதிர்பார்க்கிறது, இது 2023 ஆம் ஆண்டிற்கான அதன் திருத்தப்பட்ட கணிப்புகளிலிருந்து 42% அதிகரிப்பாகும். எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை 14% பற்றாக்குறையை கணித்துள்ளதுடன், வருமானம் ரூ.3,570 பில்லியனாக இருக்கும் என எதிர்வுகூறியுள்ளது.
பெறுமதி சேர் வரி (VAT) மூலம் கிடைக்கும் வருமானம் மிகைப்படுத்தப்பட்டதே கணிக்கப்பட்ட பற்றாக்குறையில் 61 சதவீதத்திற்குக் காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டாண்மை வருமான வரி, தனிநபர் வருமான வரி, சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) மற்றும் சுங்க இறக்குமதி வரி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் மிகைப்படுத்தப்பட்டதே மீதமுள்ள 39 சதவீதத்திற்குக் காரணமாகவுள்ளது.
வருமானத்தில் வட்டி விகிதம்
உலகில் வருமானத்திற்கு அதிக வட்டிச் செலவு விகிதத்தை இலங்கை கொண்டுள்ளதுடன், இந்த விகிதத்தைக் குறைப்பது பேரினப் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியமானதாகும். 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் இந்த விகிதத்தை 64% ஆகக் குறைக்க எதிர்பார்க்கிறது. எவ்வாறாயினும், ‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கையின்’ வருமானக் கணிப்புகள் மற்றும் வட்டிச் செலவுகள் தொடர்பான அரசாங்கக் கணக்கீடு ஆகியவை, கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இது 70 சதவீதத்தைத் தாண்டும் எனக் குறிப்பிடுகின்றன. கடன் நிலைத்தன்மையின் முக்கிய குறிகாட்டியாக பொருளாதார வல்லுநர்கள் கருதும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட பொருளாதார மீட்சித் திட்டத்தில் இலங்கை இதன் மூலமாக பின்தங்கும் நிலை ஏற்படும்.
2024 வரவு செலவுத்திட்ட நிலை தொடர்பான அறிக்கையை இங்கே பார்வையிடலாம்;https://publicfinance.lk/en/report/state-of-budget-2024#:~:text=State%20of%20the%20Budget%3A%202024&text=The%20State%20of%20the%20Budget,out%20in%20four%20main%20sections